செளந்தர்யலஹரி 53 & 54



விபக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜநதயா
விபாதி த்வந் நேத்ரத்ரிதயம் இதம் ஈசாநதயிதே
புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிணஹரிருத்ராந் உபரதாந்
ரஜஸ்ஸத்வன் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ

அம்பிகே, அஞ்சனத்தை தரித்திருக்கும் உனது கண்கள் வெவ்வேறான நிறங்களில் (வெண்மை, சிகப்பு,கருப்பு) இருப்பதானது ப்ரளய காலத்தில் உன்னிடம் மறைந்து போன பிரம்மா, விஷ்ணு ருத்ரர்களை திரும்பவும் ஸ்ருஷ்டி செய்வதற்காக வேண்டிய ரஜஸ், ஸத்வ, தமோ குணங்களோடு கூடியதாக இருக்கிறது.


அம்பிகையின் இரு-கண்களாக சூர்ய-சந்திரர்களும், நெற்றிக்கண்ணாக அக்னியும் இருப்பதாகச் சொல்லப்படும். இங்கே அன்னையின் கண்களைப் பற்றி வர்ணித்து, அதன் நிறங்களை மும்மூர்த்திகளுக்கு உரியதாகச் சொல்லியிருக்கிறார். சாதாரணமாக நமது கண்களில் கருவிழிகள் கருப்பாகவும், வெண்மை நிறைந்த பகுதியில் சிவப்பான நரம்புகளும் இருக்கிறது. இந்த நிறங்கள் முறையே ரஜஸ், ஸத்வ, மற்றும் த்மோ குணங்களுக்கானது. இதே போல ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு சிவன் ஆகியோர் அன்னையின் ரஜஸ் ஸத்வ, மற்றும் தமோ குணங்களாகச் சொல்லுகிறார் இந்த ஸ்லோகத்தில். மஹா பிரளய காலத்தில் இவர்கள் மூவரும் அழிந்து ஜகதீஸ்வரியிடத்தில் சேர்வதாகச் சொல்கிறார்.


பிப்ரத் விபாதி - தரித்து இருப்பது; சத்வ, ரஜஸ், தம என்னும்; குணானாம் த்ரயம் இவ - மூன்று குணங்களைப் போல்; த்ருஹிண ஹரிருத்ரான் தேவாந் - பிரம்ம-சிஷ்ணு-சிவன் போன்ற தேவர்களை; புந: - மீண்டும்; ஸ்ரஷ்டும் - சிருஷ்டிக்கும்; விபக்த - வெவ்வேறான; த்ரைவர்ண்யம் - மூன்று வர்ணங்களை; உபரதாந் - மறைந்திருக்கும்; வ்யதிகரித - சேர்க்கப்பட்ட; லீலாஞ்ஜநதயா - கண்மையுடன் கூடிய; இதம் - இந்த; த்வந் நேத்ர த்ரிதயம் - உன்னுடைய மூன்று கண்களும்.

அடுத்ததாக கவிராயர் சொன்னதைப் பார்ப்போமா?:

வரிவிழிச் செம்மை வெண்மை
வனப்புறு கருமை மூன்றும்
எரிதெறு கற்ப காலத்
திறந்தமுப் பொருளுந் தோன்றுங்
கருஎனக் குணங்கள் மூன்றின்
காரண மென்னப் பெற்றால்
அருமறைப் பொருளே உன்றன்
அருளலா துலக முண்டோ.

----------------------------------------------------------------------------------------------


பவித்ரீகர்த்தும் ந: பசுபதிபராதீந ஹ்ருதயே
தயாமித்ரைர் நேத்ரை: அருணதவள ச்யாமருசுபி:
சோணோ கங்கா தபநதநயேதி த்ருவம் அமும்
த்ரயாணாம் தீர்த்தானாம் உபநயஸி ஸம்பேதம் அநகம்

அம்மா!, பசுபதியிடத்து மனதை உடையவளே, உலகத்தை பரிசுத்தமாக்கும் சோணா, கங்கை மற்றும் காளிந்தீ ஆகிய நதிகளின் சங்கமம் போன்று இருக்கும் உனது கண்களானது அந்த நதிகளைப் போன்றே சிகப்பு, வெண்மை மற்றும் கருமை நிறங்களுடன் என்னைப் போன்றவர்களை புனிதர்களாக்குவதற்கு கருணையுடன் இருக்கிறது.

சோணா நதீ என்பது சிகப்பு நிறம் உடையதாம்; கங்கை வெண்மையானது; யமுனையின் இன்னொரு பெயரே காளிந்தீ, இது கருப்பு நிறமானது. இவை போன்ற நிறங்களைத் தனது கண்களிலேயே கொண்டிருக்கிறாளாம் அன்னை. இந்த நதி சங்கமிக்கும் இடமானது எப்படி அங்கு ஸ்நானம் செய்பவர்களது பாபத்தைப் போக்குகிறதோ, அதே போல அம்பாளது கண்கள் பக்தர்களது எல்லா பாபங்களையும் போக்கிடும் என்கிறார் பகவத் பாதர்.

பசுபதிபராதீந ஹ்ருதயே - பசுபதியினிடத்தே எப்போதும் ஈடுபட்ட மனத்தவளே; தயாமித்ரை - தயை/கருணையுடன் கூடிய; அருண தவள ச்யாம ருவிபி: - சிகப்பு, வெண்மை, கருமை போன்ற நிறங்களை உடைய; நேத்ரை: கண்களால்; இதி - இதுபோல்; த்ரயாணாம் தீர்த்தானாம் - மூன்று புண்ய தீர்த்தங்களைப் போல்; சோணா - சோணா நதி; கங்கா - கங்கா நதி; தபந தநயா - காளிந்தீ நதியின் இன்னொரு பெயர்; அமும் - பாபங்கள்; அநகம் ஸம்பேதம் - போக்ககூடிய ஸங்கமத்தை; பவித்ரீ - புனிதர்களாக; கர்த்தும் - செய்யும்; உபநயஸி - ஏற்படுத்துகிற; த்ருவம் - நிச்சயம்;


கவிராயர் சொன்னதைப் பார்க்கலாமா?:

அம்மைநின் கருணை பொங்கி
அலையெறி நயன வேலை
மும்மணி கெழுமுன் தொண்டர்
மும்மலங் களைய மூழ்கச்
செம்மைநன் சோணை ஆறு
தெளிகங்கை யமுனை மூன்றுந்
தம்மய தொடும்வந் துற்ற
தன்மையீ தென்பர் மிக்கோர்

செளந்தர்யலஹரி 51 & 52


சிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜநே குத்ஸநபரா
ஸரோஷா கங்காயாம் கிரிச சரிதே விஸ்மயவதீ
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸெளபாக்ய ஜனனீ
ஸகீக்ஷு ஸ்மேரா தே மயி ஜனனீ த்ருஷ்டி: ஸகருணா


தாயே! உனது கண்கள் பரமசிவனிடத்து சிருங்கார பாவத்துடனும், ஸபத்னியான கங்கையிடம் கோபத்துடனும், சிவனின் லீலைகளின் போது ஆச்சர்யத்துடனும், அவரால் அணியப்பட்ட ஸர்ப்பங்களிடம் பயத்துடனும், நெற்றிக் கண் தாமர புஷ்பம் போல் சிவப்பாக வீர ரசத்துடனும், தன்னை சந்தோஷிக்கச் செய்த ஜனங்களின் வார்த்தைகளால் ஏற்பட்ட ஹாஸ்ய ரஸத்துடனுமும், என்னிடத்தில் கருணையுடனும் ஸர்வ ரஸத்துடன் விளங்குகின்றன.

இந்த ஸ்லோகத்தின் நவரசங்களும் அம்பிகையின் கண்களில் தெரிவதாகச் சொல்லியிருக்கிறார். எப்போது எந்த ரசம் தெரியும் என்றும் கோடிட்டுக் காட்டுகிறார். பரமசிவனிடத்தில் சிருங்கார ரஸமும், மற்றவரிடத்தே பீபத்ஸ ரஸம் (வெறுப்பு), கங்கையிடத்து ரெளத்ரமும், ஈசனின் லீலைகளால் அத்புத ரஸமும், அவரது சர்பங்களால் பயமும், தாமரை போன்ற சிவந்த கண்கள் வீரத்தையும், தோழிகளிடத்து ஹாஸ்யமும், பக்தர்களிடத்து கருணையும் தெரிகிறதாம். அன்னை சாந்தமாக இருக்கையில் கண்களில் மாறுபாடு தெரிவதில்லை என்பதால் நவரசஸங்களில் அது பற்றி ஏதும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

ஸகருணா - கருணையுடன் கூடிய; ஸகீக்ஷு - ஸக தோழியர்களிடத்தே; ஸ்மேரா - சிரிப்புடன் மலர்ந்த; ஸரஸிருஹ செளபாக்ய ஜனனீ - தாமர புஷ்பம் போன்ற சிவந்த; ஹராஹிப்ய - ஹரனால் அணியப்பட்ட ஸர்பங்களால்; பீதா - பயத்துடன்; கிரிச சரிதே - ஈசன் லீலைகளால்; விஸ்வமயவதீ - ஆச்சர்யத்தோடும்; ஸ்ரோஷா - கோபத்துடன்; கங்காயாம் - கங்கையினிடத்தே; குத்ஸனபரா - வெறுப்புடனும்; சிவே - பரமசிவனிடத்து சிருங்காரார்த்ரா - சிருங்கார ரஸத்துடன்; தே த்ருஷ்டி: உன் பார்வை;

அடுத்து வருவது வீரை கவிராயரின் தமிழாக்கம்:

அரனிடத்திற் பேரின்ப அருளும் அவனல்லார்பால்
அருவருக்கும் அவன்முடிமேலணிந்த நதியைச்சீறும்
பரவுநுதல்விழி அழல்முன் பார்த்தில போலதிசயிக்கும்
பணியாய பணிவெகுளப் பயந்தன போலொடுங்கும்
விரைமுளரிப் பகைதடிந்து வீரரதம் படைக்கும்
வினவுதுணைச் சேடியற்கு விருந்துநகை விளைக்கும்
இரவுபகலடி பரவும் எளியனைக்கண்டு அருள்புரியும்
இத்தனையோ படித்தன-உன் இணைவிழிகள் தாயே!.

---------------------------------------------------------------------------------------


கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி ததநீ
புராம் பேத்து: சித்தப்ரசமரஸ வித்ராவண பலே
இமே நேத்ரே கோத்ராதரபதி குலோத்தம்ஸகலிதே
தவாகர்ணாக்ருஷ்ட ஸ்மர சர விலாஸாம் கலயத:

அம்மா!, காதுவரையில் நீண்டு, அம்பிலிருக்கும் இறகுகள் போன்று இமை மயிர்களைக் கொண்ட உனது கண்களானது, த்ரிபுராந்தகனான பரமசிவனது மனதைக் கலக்குவதற்காக மன்மதனால் காதுவரையில் இழுத்துப் பிரயோகம் செய்யப்பட்ட பாணங்கள் போன்று இருக்கின்றன.

அம்பிகையின் கண்களையும், இமையிலிருக்கும் முடிகளையும் மன்மதனது பாணங்களுக்கும், அப்பாணங்களின் இறகுகளுக்கும் உவமைசெய்திருக்கிறார் பகவத்பாதர். பாணங்களை ஏவும் சமயத்தில் அவற்றை வில்லின் நாண் கயிற்றுடன் சேர்த்து காதுவரை இழுப்பது என்பது அம்பிகையின் கண்கள் காதுவரை நீண்டிருப்பதற்குச் சமமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகர்ணாக்ருஷ்ட ஸ்மர-சர விலாஸம் - காதுவரை இழுக்கப்பட்ட மன்மத பாணத்தின் அழகு; கலயத: - உடைத்தாயிருக்கின்ற; தததீ - தரித்துக் கொண்டு; புராம் பேத்து: - புரங்களையழித்த பரமனின்; சித்த ப்ரசமரஸ - மனதின் நிராசையைப் போக்கும்படியான; தவ - உன்னுடைய; இமே நேத்ரே - இந்த கண்களிரண்டும்; கர்ணாப்யர்ணம் கதே - காதுகளுக்கு ஸமீபம் போய்; பக்ஷ்மாணி - இமை மயிர்களை; கருதவ இவ - அம்பிலிருக்கும் இறகுகள் போன்ற; கோத்ராதரபதி - மலைகளின் பதியான ஹிமவான்; குலோத்தம்ஸகலிகே - குலத்தின் மொட்டு (குலவிளக்கு?) போன்றவளே.

அடுத்து வருவது வீரை கவிராயரின் தமிழாக்கம்:

இகல்பொரக் குழையை முட்டும்
இமைமயிர் ஒழுங்கிற் றூவல்
நிகரறு நித்தர் யோக
நீக்கிவெம் போக நல்கும்
சிகரவெற் பரசன் தொல்லைத்
திருமர பென்னுமந் தெய்வ
மகுடமா மணிநின் கண்கள்
வயமதன் வாளிதானே.

செளந்தர்யலஹரி 49 & 50


விசாலா கல்யாணீ ஸ்புடருசியோத்யா குவலையை:
க்ருபாதாராதாரா கிமபி மதுரா போகவதிகா
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர விஸ்தார விஜயா
த்ருவம் தத்தன் நாம வ்யவஹரண யோக்யா விஜயதே


அம்பிகே!, உன் கண்கள் விசாலமாக இருப்பதால் விசாலா என்றும், மங்களகரமானதால் கல்யாணி என்றும், இந்தீவர புஷ்பங்களாலும் ஜெயிக்க முடியாத அழகுடையதால் அயோத்யா என்றும், கருணையினை தாரையாக பொழிய ஆதாரமாக இருப்பதால் தாரா என்றும், வர்ணிக்கமுடியாத மாதுர்யத்துடன் இருப்பதால் மதுரா என்றும், ஆழ்ந்த உணர்வினைத் தருவதால் போகவதீ என்றும், சகல உலகங்களையும் காப்பதால் அவந்தீ என்றும் கூறத்தக்கவாறு அந்த நகரங்களில் விஜயம் செய்து கொண்டு விளங்குகின்றன.


இந்தப் ஸ்லோகத்தில் அம்பாளின் எட்டு விதமான த்ருஷ்டிகளுக்கு (பார்வைகளுக்கு), 8 நகரங்கள் உதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரணமாக சாமுத்ரிகா லக்ஷணங்களுடைய பெண்களின் பார்வையை இவ்வாறு பிரித்துச் சொல்வது வழக்கமாம். இந்த 8 விதமான பார்வைகளாவன; உள்ளார்ந்த, ஆச்சர்யமான, முழுதாக மலர்ந்த, களைப்போடு கூடிய, சஞ்சலமான, ப்ரியத்துடன் கூடிய, மயங்கிய நிலையில், மற்றும் பாதி மூடிய நிலையிலானதாம். இவை எல்லா பெண்களிடத்தும் இருந்தாலும், அன்னையிடத்து இவை இருப்பது, ஸம்க்ஷோபண, ஆகர்ஷண, த்ராவண, உன்மாதன, வச்ய, உச்சாடன, வித்வேஷண, மாரண சக்திகளைக் கூறிப்பதாக தேதியூரார் தமது விளக்கத்தில் சொல்லியிருக்கிறார்.

ஸம்க்ஷோபணம் - குழப்பம்; த்ருவம் விஜயதே - நிச்சயமாக விளங்குகிறது; தத் தத் - அந்தந்த; நாம வ்யவஹரண யோக்யா - பெயர்களால் அழைக்கும் யோக்கியதை உடைய; பஹுநகர - அநேக நகரங்கள்; விஸ்தார விஜயா - விஸ்தாரமாக விஜயம் செய்ய; அவந்தீ - காப்பாற்றுகின்ற; ஆபோகவதிகா - ஆழ்ந்த; கிமபி மதுரா - வர்ணிக்க முடியாத மாதூர்யமான; க்ருபா - கருணை; தாராதாரா - ப்ரவாஹத்துக்கு ஆதாரமான; குவலையை: - இந்தீவர புஷ்பம்; அயோத்யா - ஜெயிக்க முடியாத; ஸ்புடருசி - விரிந்த காந்தியுடையது; கல்யாணி - மங்களமான; தே திருஷ்டி - உன் பார்வை.

கோலநகர் விசாலையாய் நிரந்தரக் கல்யாணியாய்க்
குவலயத்தால் அயோத்தியாய்க் குலமதிரை தானாய்
சாலஒளிர் போகவதியாய் அமுத தாரையாய்த்
தண்ணளியால் அவந்தியாய்ச் சகவிசையை எனலாய்
நிலவிழி புடைபரந்து நெடுநகரப் பெயர்கவர்ந்து
நீண்டு சேந்தரிபரந்து நிகரொழிக்கும் என்றால்
ஆலவிடம் அமுதெனக்கொண்டு அருந்திய உன்மத்தர் புரம்
அதனில் ஒருபுறம் கவர்தல் அதிசயமோ தாயே!

-------------------------------------------------------------------------------------------------
கவீனாம் ஸந்தர்பஸ்தபக மகரந்தைக ரஸிகம்
கடாக்ஷ வ்யோக்ஷேப ப்ரமர கலபெள கர்ணயுகளம்
அமுஞ்சந்தெள த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத தரளெள
அஸுயாஸம்ஸ்ர்காத் அளிகநயனம் கிஞ்சித் அருணம்

கவிஞர்களது க்ரந்தங்களான புஷ்பங்களில் இருக்கும் மகரந்தத்தை பருகுவது போல உனது காதுகள் அமைந்திருக்கிறது. அந்த க்ரந்தங்களில் சொல்லப்பட்ட நவரசங்களையும் பார்க்க உனது இரு கண்களும் தேனிக்கள் போல சுற்றிச் சுற்றி வருகின்றது. உனது இரு கண்களைப் பார்த்த நெற்றிக் கண்ணானது பொறாமையால் சிவந்து காணப்படுகிறது என்கிறார்.

அதாவது, அன்னையின் காதுகள் நீண்டு இருப்பதும், அவளை துதிக்கும் பக்தர்களது கோரிக்கைகளை எப்போதும் அக்காதுகள் கேட்டுக் கொண்டு இருப்பதையும், அவளது கண்கள் பக்தர்களுக்கு கருணை மழை பொழிந்த வண்ணம் இருப்பதாகவும், அக்னி ரூபமான நெற்றிக் கண் தூர்-மதியுடையவர்களை சுட்டெரிக்க ஏதுவாக சிவந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கிஞ்சித் அருணம் - கொஞ்சம் சிவப்பாக; அளிக நயனம் - நெற்றிக்கண்; அஸுயாஸம்ஸ்ர்காத் - பொறாமையால்; கடாக்ஷ வ்யக்ஷேப - கடாக்ஷிக்கும் கண்களாகிய; ப்ரமர கலபெள - தேனிக் குஞ்சுகள்; தவ கர்ணயுகளம் - உன்னிரு காதுகளும்; மகரந்தைக ரஸிகம் - மகரந்தத்திலிருக்கும் தேனைப் பருக விரும்பும்; ஸந்தர்பஸ்தபக - மலர்ச் செண்டினைப் போன்ற கர்ந்தங்கள்; கவீனாம் - கவிகள்

அடுத்து வருவது கவிராஜர் சொன்னது.

இருசெவியுண் பலகவிதை
இரரொழுகு பசுந்தேனிற்
பெருகுநவ ரதமருந்திப்
பிறழ்ந்திடுமுன் பிணைவிழியாங்
கருநிறவண்டினைக் களிப்பக்
கண்டு பொறாதென்னையோ
வரிநுதற்கண் அளிசிவந்த
வளம்பாராய் மலர்க்கொடியே.

செளந்தர்யலஹரி 47 & 48



ப்ருவெள புக்நே கிஞ்சித் புவனபயபங்கவ்யஸ்நிதி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகரருசிப்யாம் த்ருதகுணம்
தநுர்மந்யே ஸவ்யேதரகர க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்டே முஷ்டெள ச ஸ்தகயதி நிகூடாந்தரம் உமே


ஸகல புவனங்களுக்கும் அபயம் கொடுத்திருக்கும் உமையவளே!, கொஞ்சம் வளைந்திருக்கும் உன்னுடைய புருவங்கள் வில்லாகவும், உனது கண்களாகிய வண்டுகளை வில்லின் நாணாகவும் (வில்லில் இருக்கும் கயறு), அந்த வில்லை மன்மதன் தனது வலது கையில் பிடித்திருப்பது போன்று உனது நாச தண்டமும் (மூக்கு), மன்மதனது வில் பிடித்த கையின் முஷ்டியானது நாணின் நடுப்பகுதியையும், அவனது விரல்களும் உள்ளங்கையும் வில்லின் நடுப்பகுதியையும் மறைத்ததுபோல தோன்றத்தை தருகிறது.

இந்தப் பாடலில் அம்பிகையின் புருவங்கள் மன்மதனுடைய வில்லுக்கு சமமாகக் கூறப்பட்டுள்ளது. மன்மதனது வில்லில் 'மெளர்வி மதுகரமயீ'' என்பதாக (இங்கே) அதாவது வண்டுகளே நாணாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடலில் அந்த வண்டுகளாக அன்னையின் கண்விழியசைவினைச் சொல்கிறார். காதுவரை நீண்ட மீன் போன்ற கண்களில் (மீனாக்ஷி) கருவண்டு போன்ற கருவிழிகள் ஒரு முனையிலிருந்து இன்னொன்றுக்குப் போய்வருவது நாண் போன்ற தோற்றத்தை தருகிறதாம். அன்னையின் நாஸதண்டம் (மூக்கு) மன்மதனுடைய முழங்கைக்கும், அவனது முஷ்டி (மடங்கிய விரல்கள் உடைய கைப் பகுதி) அன்னையின் புருவங்களூக்கு மத்தியில் இருக்கும் பகுதிக்கும் சொல்லியிருக்கிறார்.

சாதாரணமாக வில்லில் இருந்து அம்பு எய்வதற்கு முயலும் போது இடது கரத்தில் வில்லும், அம்பினை வலது கரத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே தெளிவாக வலது (ஸ்வயேதர) கரத்தில் வில்லை வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். வில்லை வலதுகையினால் பிடித்தால்தான் அதன் நாண்கள் முழங்கைகளால் மறைக்கப்படும், இடதுகையில் அம்பெய்யும் விதமாகப் பிடித்தால் நாண்கள் மறைந்திருக்காது, அப்படியே மறைந்திருப்பதைக் காண முயன்றாலும் புருவ மத்தியானது விரல்களால் ஏற்படும் சுருங்கிய தோற்றம் தராது, புறங்கையினையொத்த இடைவெளி போன்றே தோன்றும். சகல உலகங்களுக்கும் பயத்தினைப் போக்கும் விதமாக புருவங்களை சற்றே நெரிப்பதால் தோற்றம் தருவதானது, நாணேற்றிய வில்லுக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

புவன-பய-பங்க-வ்யஸ்நிநி - சகல லோகங்களுக்கும் இருக்கும் பயத்தைப் போக்கும் சக்தியுடையவளே; த்வதீயே-உன்னுடைய;கிஞ்சித் புக்னே-கீழ் நோக்கிபடி கொஞ்சம் வளைந்த; ப்ருவெள - புருவங்கள்; மதுகர ருசிப்யாம் - வண்டுகள் போல அழகுடன் கூடிய; நேத்ராப்யாம் - கண்களால்; த்ருத குணம் - நாண் ஏற்றியதான; ஸ்வ்யேதர கர க்ருஹீதம் - வலதுகையால் பிடிக்கப்பட்ட; ப்ரகோஷ்டே - முழங்கையின் முடிவுப் பகுதி; முஷ்டெள் ச - விரல்கள் மடக்கிப் பிடித்த; ஸ்தகயதி - மறைக்கப்பட்டதால்; நிகூடாந்த்ரம் - மறைந்த நடுப்பகுதி; ரதிபதே: - ரதியின் பதி-மன்மதன்; தனுர் - வில்; மந்யே - நினைக்கிறேன்.

உமா என்று இங்கே அன்னையை விளித்திருக்கிறார். உமா என்பதற்கான விளக்கத்தை பிறகு ஒரு தனிப் பதிவில் பார்க்கலாம். இப்போ கவிராஜர் சொன்னதைப் பார்க்கலாமா?

கருவிழிச் சுருப்பு நாண் உன்
கண் மலரம்பு கன்னற்
புருவவில் நடு ஒழித்தல்
போன்றத்ய் வளைத்துப் போர்மேல்
வருமதன் பிடித்த கைக்குள்
மறைந்தது போலும் என்றால்
திருமகள் பரவும் அம்மே
சிலையிது புருவம் அன்றே


------------------------------------------------------------------------------------------------


அஹஸ் ஸுதே ஸவ்யம் தவ நயனம் அர்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீ நாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டி: தரதளித ஹேமாம்புஜருசி:
ஸ்மாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோரந்தர சரீம்


அம்மா, சூர்ய ரூபமான உன்னுடைய வலதுகண்களால் பகலையும், சந்திர ரூபமான இடது கண்களால் இரவையும் உண்டுபண்ணுகிறாய். கொஞ்சமாக மலர்ந்ததும், தங்கத் தாமரைபோன்ற காந்தி/ஒளி உடையதும், அக்னி ரூபமானதுமான உனது நெற்றிக்கண்ணானது இரு சந்தியா காலங்களையும் உண்டு பண்ணுகிறது.




அம்பாளுடைய கண்களாலேயே பகல்-இரவு மற்றும் ஸந்தியாகாலம் ஆகியவை உருவாகிறது என்று கூறப்படுவதால் தான் காலாதீதமானவள் என்று அம்பிக்கை கூறப்படுகிறாள். பரமசிவன் போன்றே அன்னைக்கும் நெற்றிக் கண் உண்டு. பரமசிவனைப் போலவே இவளது நெற்றிக் கண்ணும் அக்னி ஸ்வரூபம். அந்த நெற்றிக் கண்ணானது, அக்னியின் நிறமும், ஹேம-அம்புஜத்தின் (தங்க தாமரை) ஒளியும், சூரிய உதய/அஸ்தமன நேரத்தில் உருவாகும் சிவப்பு நிறமும் கொண்டதாக, மலர்ந்தும்-மலராத தங்கத்தாமரை போல இருக்கிறதாம்


தவ ஸவ்யம் நயனம் - உன் வலது கண்ணானது; அர்க்காத்மகதயா - ஸூர்யனாக; அஹஸ் ஸூதே - பகலை உண்டுபண்ணுகிறது; தே வாமம் நயனம் - உன் இடது கண்ணானது; ரஜனீ நாயகதயா - சந்த்ரனாக இருந்து கொண்டு; த்ரியாமாம் ஸ்ருஜதி - ராத்ரியை உண்டுபண்ணுகிறது; தே த்ருதீயா த்ருஷ்டி: நெற்றியில் இருக்கும் மூன்றாவது கண்ணானது; தர தனித ஹேமாம்புஜ ருசி: - கொஞ்சம் மலர்ந்த தங்கத் தாமரையின் ஒளியுடன்; திவஸ நிசயோ: அந்தர சரீம் - பகல்-இரவுக்கு இடைப்பட்ட; ஸந்தியா - சந்தியாகால; ஸாமாதத்தே - உருவாக்குகிறது.


ஒருமலர்க்கண் இரவி-வலத்து
உதித்தருளும் நண்பகலும்
ஒருமலர்க்கண் மதியின் இடத்து
உதித்தருளும் பேரிரவும்
திருநுதற்கட் பொற்கமலச்
செந்நிறத்தீ விளைத்தருளும்,
விரவுசெக்கர் மாலையும்
உன்விழைவு அகலா விழுப்பொருளே

செளந்தர்யலஹரி 45 & 46



அராளை: ஸ்வாபாவ்யாத் அளிகளப ஸஸ்ரீபிரளகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹருசிம்
தரஸ்மேரே யஸ்மிந் தசநருசி கிஞ்ஜல்க ருசிரே
ஸுகந்தெள மாத்யந்தி ஸ்மரதஹந சக்ஷுர் மதுலிஹ:

தாயே, இயற்கையாகவே சுருண்ட முடியால் சூழப்பட்ட உனது நெற்றியானது, வண்டுகளால் சூழப்பட்ட தாமரை மலரை தோற்கடிப்பதாக இருக்கிறது. அந்த முகத்தில் தவழும் உனது புன்சிரிப்பினால், பல்வரிசைகளின் மூலமான காந்தியை பிரதிபலிக்கும் இதழ்கள், மற்றும் பரிமளமுடைய அந்த முகாரவிந்தத்தால் காமனை வென்ற பரமசிவனின் கண்களான தேனிக்கள் மயங்கியிருக்கின்றன. மன்மதனை எரித்த பரமசிவனது கண்கள், இப்போது அம்பிகையின் முக லாவண்யத்தினால் காமவிகாரத்தை அடைந்ததாம்.

இந்த ஸ்லோகத்தில் அன்னையின் முகம் தாமரைப் புஷ்பமாகவும், அவளது முன்னுச்சியில் இருக்கும் சுருண்ட முடியானது தாமரையை மொய்க்கும் வண்டுகளாகவும் சொல்கிறார். அம்பிகையின் சிரிப்பினால் வெளிப்படும் பல்வரிசை மூலம் வெளிவரும் காந்தியுடன் கூடிய அந்த முகத்தைக் கண்ட பரமசிவன் மயங்கிவிடுகிறார். பரமசிவனைச் சொல்லும் போது, என்னதான் காமனை ஜெயித்தவரானாலும் அன்னையின் முகலாவண்யத்தின் முன் மயங்கி விடுவதாக சொல்லப்பட்டிருக்கிறது.


ஸ்வபாயாத் - இயற்கையாகவே; அராளை - சுருட்டையான; ப்ரீதம் - சூழப்பட்ட; அளகை - முன்னுச்சி மையிர்கள்; அளிகளப - சிறு வண்டுகள்; ஸஸ்ரீபி: - காந்தியுடைய; தே வக்த்ரம் - உன் முகமானது; தரஸ்மேரே - புன்சிரிப்புடன் கூடியது; தசனருசி - பல் வரிசைகளுடைய; கிஞ்ஜல்க - இதழ்களால்; ஸுகந்தெள - நல்ல மணமுள்ள; யஸ்மிந் - முகத்தில்; ஸ்மரதஹந - மன்மதனை எரித்த; சக்ஷுர் மதுலிஹ: - கண்களான தேனீக்கள்; மாத்யந்தி - மயங்குகின்ற

கூரெயிற்றின் அகஇதழுங் கொண்கர்விழி வரிவண்டும்
குழற்படிந்த மதுகரத்தின் குழாமும் கூடிப்
பேரியற்கை மணம்பொதிந்து புன்மூரல் முகையவிழப்
பிறழுமுன் தருணமுக கமல மென்றால்
ஒறியற்கை வாடுமிதழ் பொறிவண்டே படிவது
மற்றோர்-இயற்கை செயற்கைமணம் போதுசெய்யும்
நீரியற்கை மலர்க்கமல மிதற்குடைந்து பங்கமுறல்
நீதியென்பது யாரறியார் நிகரில் மாதே

--------------------------------------------------------------------------------------

லலாடம் லாவண்யத்யுதி விமலம் ஆபாதி தவ யத்
த்விதீயம் தந்மந்யே மகுடகடிதம் சந்த்ர சகளம்
விபர்யாஸ ந்யாஸாத் உபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேப ஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர:

லாவண்யமான வெண்ணிலாவுடன் ப்ரகாசிக்கும் உனது நெற்றியானது கிரீடத்திலிருக்கும் அர்த்த சந்திரனைத் தவிர்த்து வேறான அர்த்த சந்திரன் போல தோன்றுகிறது. ஏனென்றால் மேலும் கீழுமாக எதிரெதிர் திசையில் வளைவுகளையுடைய இரு நிலாக்களையும் வளைவுகள் பொருந்தும்படியாகச் சேர்த்து வைத்தால் அம்ருதம் நிறைந்த பூர்ண சந்திரன் போன்ற தோற்றமாம். இது தான் "அஷ்டமீசந்த்ர பிப்ராஜத் அலிகஸ்தல சோபிதா" என்னும் நாமம்.


அன்னையின் உச்சிக் வகிட்டின் கேசங்களுக்கு கீழ் புருவம் வரையில் இருக்கும் நெற்றிப் பகுதி வளைந்து கன்னங்களை அடைவது பிறைச் சந்திரனைத் தலைகீழாக கவிழ்த்து வைத்தது போல் இருக்கிறதாம். (இது பற்றி பெரியவர் திராச ஒரு பதிவு போட்டிருக்கிறார், அது இங்கே). பிறைச் சந்திரன் என்று சொல்லும் போது அர்த்த சந்திரன் என்கிறார். அஷ்டமீ தினமானது பக்ஷத்தின் நடுவில் இருக்கும் திதி. அமாவாசையில் இருந்து தினமும் சந்திரனைப் பார்த்துக் கொண்டே வந்தால் அஷ்டமி தினத்தில் சரிபாதியாக வளர்ந்திருக்கும். அதனால் அர்த்த சந்திரன். இவ்வாறாக இரு அர்த்த சந்திரனை வளைவுகள் பொருந்தும்படி அமைத்தால் வருவது முழு நிலா.


யத் லலாடம் - உன் நெற்றியானது; லாவண்யத்யுதி - நிர்மலமான நிலவு; ஆபாதி - ப்ரகாசிக்கிறதோ; மகுடகடிதம் - கீரிடத்தில் இருக்கும்; த்விதீயம் - இரண்டாவதான; சந்த்ர சகலம் - அந்த சந்த்ர பிம்பம்; மந்யே - நினைக்கிறேன்; உபயமபி - சிரசில் இருக்கும் அர்த்த சந்திரனும், நெற்றியாக இருக்கும் அர்த்த சந்திரனும் ஆகிய இரண்டும்; விபர்யாஸந்யாஸாத் - வித்தியாசமான வளைவுகளைக் கொண்டிருக்கும்; மத: ஸ்ம்பூயச - சரியாக பொருந்துவதால்; ஸுதாலேபஸ்யூதி: - அம்ருதத்தால் பூசப்பட்ட/நிறப்பப்பட்ட; ராகா ஹிமகர: - பூர்ண சந்திரனாக; பரிணமதி - ஆகின்றது.


கோதை நீண்முடி கொண்டொளிர் திங்கள்சேர்
பாதி வாள்நுத லென்று படிந்ததோ
ஈது கூடி யிரண்டு நிறைந்ததோ
சீத பூரணத் திங்கள் சிறந்ததே

செளந்தர்யலஹரி 43 & 44



துநோது த்வாந்தம் ந: துலித தளிதேந்தீவர வநம்
கந ஸ்நிக்த ச்லக்ஷணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே
யதீயம் ஸெளரப்யம் ஸஹஜம் உபலப்தும் ஸுமநஸோ
வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதநவாடீ விடபிநாம்


ஹே! பார்வதி! மலர்ந்த நீலோத்பல புஷ்பங்களின் வனம் போன்றதும், அடர்த்தியானதும், வழவழப்பானதுமான உன் கேசமானது எங்களது மனதிலிருக்கும் அஞ்ஞான இருட்டைப் போக்கட்டும். அங்கே உன் கூந்தலில் இருக்கும் மலர்களானது கூந்தலில் உள்ள இயற்கையான பரிமள சுகந்தத்தை தாங்களும் அடைய்வதற்காக வந்திருக்கின்றன போலும்.

அன்னையின் கரிய கூந்தலானது நமது மனத்தில் இருக்கும் அஞ்ஞான இருட்டுக்கு உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் தங்களது கேசத்தில் மணம் சேர்வதற்கு பூ முடிப்பார்கள், ஆனால் அன்னையின் கூந்தலில் இருப்பதால்தான் இந்திரனது உத்யான வனத்துப் புஷ்பங்கள் கூட மணம் பெற்றது என்பது வர்ணனை. இவ்வாறாக, முந்திய பாடலில் பார்த்த கிரீட வர்ணனை முடிந்து இப்போது கூந்தல் வர்ணனை பண்ணியிருக்கார். இதற்கு தகுந்த சஹஸ்ர நாமம் 'புன்னாக செளந்திக லஸ்த்கசா' என்பது. இதற்கு பாஷ்யம் பண்ணின பாஸ்கர ராயர் இயற்கையான மணமுள்ள கூந்தலில் இம்மலர்கள் அலங்காரத்திற்கு மட்டுமேயன்றி, சாதாரண மனிதர்கள் போல் கேசத்திற்கு மணம் சேர்க்க அல்ல என்று கூறுகிறார்.

துலித தளிதேந்தீவர - மலர்ந்த புஷ்பங்களீன் வனத்திற்குச் சமமான; கந ஸ்நிக்த ச்லக்ஷ்ணம் - அடர்த்தியான, வழவழப்பான; தவ- உன்னுடைய; சிருர நிருகும்பம் - கேச அலங்காரம்; த்வாந்தம் - அஞ்ஞானம்; துனோது - போக்கடிக்கும்; யதீயம் - எவற்றின்; ஸஹஜம் - இயற்கையான; ஸெளரப்யம் - வாசனை; உபலப்தும் - அடைவதற்காக; வலமதந - வலன் என்ற அசுரனை வதைத்த இந்திரன்; வாடீ விடபினாம் - உத்தியான வனத்தில்; ஸுமநஸ: - புஷ்பங்கள்; மந்யே - நினைக்கிறேன்.

கிழே இருப்பது இதன் தமிழாக்கம் வீரை கவிராஜர் செய்தது:


அலர்ந்தகரு நெய்தலங் காடெனக் கடைகுழன்று
அறநெய்த் திருண்டு செறிவோடு
இலங்குறு மியற்கைமணம் எண்திசை யளப்பவதில்
இதழ்மூழ்கு நறைவி ழைவினாற்
பொலன்கொண்முடி யாகண்ட லேசற்பொற் றுணர்விரி
பொதும்பர்மது மலர்ப் டிவதோர்
சிலம்பளி பரந்தஉன் தோதியென் மனத்திருட்
செறிவுதெற அருள்க மலையே!

----------------------------------------------------------------------------------------

தநோது க்ஷேமம் நஸ்தவ செளந்தர்ய லஹரி-
பரீவாஹ ஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த ஸரணி:
வஹந்தி ஸிந்தூரம் ப்ரபல கபரீ பாரதிமிர-
த்விஷாம் ப்ருந்தை: பந்தீ க்ருதமிவ நவீநார்க்க கிரணம்

அம்மா!, அடர்ந்த இருள் சூழ்ந்த இடத்தில் சிறைவைக்கப்பட்ட பால சூர்யனது ஒளி போன்று சிந்தூரத்தை தரித்துக் கொண்டு இருப்பதும், உன் முக அழகானன் வெள்ளத்திற்கு கால்வாய் போன்றதான உனது கேசத்தின் வகிடானது எங்களுக்கு சகலவிதமான க்ஷேமங்களையும்/நன்மைகளையும் தரட்டும்.

பெண்கள் தமது கூந்தலை இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளுதல் வழக்கம். அவ்வாறு பிரித்துக் கொள்ளும் போது நடுவில் கோடு மாதிரி வருவதை வகிடு என்போம். [கிராப் வைத்த ஆண்களுக்கும் இப்போது வகிடு இருக்கிறது] இந்த வகிட்டினை ஸீமந்தம் என்பர் சம்ஸ்கிருதத்தில். சுமங்கலிகள் இவ்வாறு வகிட்டில் குங்குமம் தரிப்பது வழக்கம். பதிவிரதைகளின் ஸீமந்தப் பிரதேசமானது லக்ஷ்மி வாசம் செய்யும் இடங்களில் ஒன்று என்பர். இளஞ்சூரியனது கிரணங்கள் சிவப்பு நிறத்தில் இருப்பதை பார்த்திருக்கிறோம். அது போன்ற நிறத்தில் அன்னை தனது அழகு வெள்ளத்திற்க்கான கால்வாய் போன்ற வகிட்டில் சிந்தூரம் வைத்திருக்கிறாளாம்.

வதந - முகத்தின்; செளந்தர்ய - அழகிய; லஹரி - வெள்ளம்; பரீவாஹ - ப்ரவாஹம்; ஸ்ரோத: - வழியும்; ஸரணிரவ - கால்வாய் போன்ற; ஸீமந்த ஸரணி - வகிடாக இருக்கும் ரேகை; கபரீபார - கேச பாரம்; திமிர - கருப்பான; த்விஷாம் ப்ருந்தை: எதிரிக் கூட்டம்; பந்தீக்ருதம் - சிறை செய்யும்; நவிநார்க்க கிரணமிவ - இளஞ்சூரியனது கதிர்கள் போல்; சிந்தூரம் - குங்குமம்; வஹந்தி - தரித்த; தனோது - கொடுக்கட்டும்.

அடுத்து கவிராஜர் சொன்னது;

மோதிய வெங்கதிர் மீளவெ ருண்டிருள்
மூடஓ துங்கிய வாறேயோ
சோதிமு கங்கவி னேறி வழிந்தன
சோரவி டுங்கவர் காலேயோ
ஒதிபி ணைந்து பின்வீழவ கிர்ந்ததன்
ஊடெழு தும்பரப்பை யாதேயோ
கோதறு சிந்துர ரேகைவ ளம்பிறர்
கூறுவ தன்றிது மாதாவே

செளந்தர்ய லஹரி - 42

போன இடுகையில் சாக்த உபாஸனையில் இருக்கும் இரு பெரும் பிரிவுகளைப் பற்றிய சில விஷயங்களைக் கண்டோம். இவ்விடுகையில் செளந்தர்ய லஹரி பகுதிக்குச் செல்லும் முன் தமிழில் செளந்தர்ய லஹரியை மொழியாக்கம் செய்த கவிராஜ பண்டிதர் என்பவரைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வோம்.

இவர் பாண்டிய நாட்டில் வீரை [இப்போது என்ன பெயர் என தெரியவில்லல] என்ற ஊரில் வசித்தவர். சிறு-பிராயம் முதலே அம்பிகையின் உபாசனையில் ஈடுபட்டு அவளுடைய தரிசனம் கிடைக்கப் பெற்றவர் என்று தெரிகிறது. தக்ஷிணம், வாமம் என்கிற இரண்டு வித உபாசனைகளில், இவர் வாம மார்க்கத்தை அவலம்பித்தவர்/உபாசித்தவர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அம்பிகையின் திருவருளால் விசேஷமான கவித்துவம் வாய்க்கப் பெற்று விளங்கியிருக்கிறார். இவர் வராஹி-மாலை, ஆனந்த-மாலை போன்ற நூல்களை எழுதியிருக்கிறார்.

இவருடைய செளந்தர்ய லஹரி மொழியாக்கமானது ஏற்கனவே இருக்கும் ஆனந்தலஹரி-செளந்தர்ய லஹரி என்னும் பிரிவினை அனுசரித்தே இருக்கிறது. இம்- மொழியாக்கம் சம்ஸ்கிருதத்தின் மூலத்தை அப்படியே ஒட்டி இருப்பது விசேஷம். இது மிக எளிதாகவும், படிக்கப்படிக்க இன்பமும், அன்னையின் அருளையும் உணரச்செய்கிறது என்றால் மிகையல்ல. இந்த மொழிப் பெயர்ப்புக்கு சைவ எல்லப்ப நாவலர் என்பவர் உரையும் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

இனி ஒவ்வொரு செளந்தர்ய லஹரி இடுகையின் முடிவிலும் இந்த தமிழாக்க பாடல்களும் இடம் பெறும். இடுகையின் முடிவில் இந்த தமிழாக்கத்தைச் சொல்வதால் தமிழை பின் தள்ளுவதாக அர்த்தம் கற்பிக்காது, மூலத்தைச் சொல்லி அதன் மொழிப் பெயர்ப்பைச் சொல்லும் மரபாக மட்டுமே பார்க்க வேண்டுமென வேண்டுகிறேன்.

41ஆம் ஸ்லோகம் தனி இடுகையாக இருப்பதால் இவ்விடுகையில் 42ஆம் ஸ்லோகத்தை மட்டும் பார்க்கலாம்.



கதைர் மாணிக்யத்வம் ககநமணிபி: ஸாந்த்ரகடி
தம்கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:
ஸ நீடேயச்சாயாச் சுரணசபளம் சந்த்ரசகலம்
தநு: செள்நாஸீரம் கிமிதி ந நிபத்நாதி தஷணாம்

மலையரசன் மகளே!, த்வாதச ஆதித்யர்களே மாணிக்கங்களாக இழைக்கப்பட்ட உன்னுடைய தங்கக் கிரீடத்தை எந்த பக்தனாவது வர்ணிக்கையில், உன் கிரீடத்தில் பதிந்திருக்கும் ரத்னங்களின் காந்தியால், [அந்த கிரீடத்தில் இருக்கும்] சந்திரன் பல நிறமுடையதாக தோன்றுவதைக் காணும் போது சந்த்ரனை இந்திர தனுஸோ என்று சந்தேகித்து அப்படியே வர்ணிக்கக்கூடும்.

ஈஸ்வரன் தன் தலையில் சந்திரனை அணிந்திருப்பது போல அம்பாளும் அணிந்திருக்கிறாள். ஆக அம்பாளும் சந்த்ரமெளலி தான். அன்னைக்கு "அஷ்டமிச் சந்த்ர விப்ரபா" என்ற நாமம் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறாக அன்னையின் கிரீடத்தில் உள்ள சந்த்ரன் வெண்மையாக இருந்தாலும், அவளது கிரீடத்தில் இழைக்கப்பட்டிருக்கும் மற்ற நவரத்னங்களான பன்னிரு ஆதித்யர்களது ஒளியால் பல வர்ணங்களில் ஜகஜ்வலிக்கும் இந்திர தனுசு போன்று காக்ஷியளிக்கிறதாம். இதுவே "ஐந்த்ரஸ்யேவ சராஸனஸ்ய தததீ மத்யேலலாடம் ப்ரபாம்" என்று லகுஸ்துதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே த்வாதச ஆதித்யர்கள் அம்பாளுக்கு அருகில் இருந்து சேவை செய்கிறார்கள் என்பது குறிப்பு.


ஹிமகிரிஸுதே - மலையரசன் மகளே; மாணிக்யத்வம் - மாணிக்கங்களாக; கதை: - இருக்கும்; ககநமணிபி: - ஆதித்யர்களால்; சாந்த்ர கடிதம் - நெருக்கமாக இழைத்த; தே - உன்னுடைய; ஹைமம் - தங்கம்; நீடேயே - கிரீடத்துக் குவளைப்பகுதியில் இருக்கும் ரத்னக்கள்; ச்சாயா - காந்தி/ஒளி; ச்சுரண - வ்யாபிக்கிறது/பரவுகிறது; சபளம் - பல நிறங்களாக தெரிதல்; சந்த்ர சகலம் - சந்த்ர பிரபை/ரேகை; செளநாஸிரம் தனு: - இந்த்ர வில்; திஷணாம் - யூகம்; ந நிபத்னாதி கிம் - கொள்ளமாட்டானா?.

இனி வருவது கவிராயரது செய்யுள்,

அந்தர மணித்தபனர் பலமணியின் வடிவெடுத்
தமருமுன் தம்பொன் முடிமேல்
இந்துகலை நவமணியி னொழுகுபல நிறமடைந்து
இலகுமதி சயவ டிவினாற்
சந்த்ரகலை நன்றுநன் றென்பர்சிலர் அன்றன்று
சந்த்ரகலை இந்த நிறமோ
இந்த்ரசிலை இந்த்ரசிலை யென்பர்சில ராதலால்
யாதென வழுத்த உமையே.