ஆனந்த லஹரி - 27 & 28




ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்

அம்பிகே!, எல்லாம் உனக்கு என்ற ஆத்ம சமர்பண நோக்குடன், நான் பேசுவதெல்லாம் உன் மந்த்ர ஜபமாகவும், என் உடலசைவுகள் உன் முத்திரைகளாகவும், என் நடை உன்னை பிரதக்ஷிணம் செய்வதாகவும், நான் புசிப்பதெலாம் உனக்குச் செய்யும் ஹோமமாகவும், நான் படுப்பது உனக்கு செய்யும் நமஸ்காரமாகவும் ஆகட்டும். இவ்வாறு என் சுகத்திற்காக நான் செய்யக்கூடிய செயல்கள் எல்லாம் உன் பூஜையாகவே ஆகட்டும்.


அம்பிகைக்கு "தசமுத்ரா சமாராத்யா" அப்படின்னு சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம் இருக்கு. அதாவது, ஸம்க்ஷோபிணீ, வித்ராவிணீ, ஆகர்ஷிணீ, வசங்கரீ, உன்மாதினீ, மஹாங்குசா, கேசரீ, பீஜ, யோனி, த்ரிகண்டா என்னும் பத்து முத்ரைகளால் வணங்கப்படுபவள் அப்படின்னு அர்த்தம். ஸமயாசார்த்தை பின்பற்றும் ஞானிகள் அம்பிகையின் பிம்பத்திலோ அல்லது சக்ர ராஜத்திலோ இந்த முத்ரைகளை வெளிப்படையாக காண்பித்து பூஜை செய்வதில்லை. அவர்களது இயற்கையான செயல்களே இம்முத்ரைகளாக ஆகிவிடுமாம்.
ஆச்சார்யார் இதை சிவமானச பூஜா ஸ்தோத்திரத்திலும் (5ஆம் ஸ்லோகமாக) இங்கே சொல்லியிருக்கார்.


ஜல்ப: - பேச்சு; ஸில்பம் ஸ்கலமபி - கைத்தொழில் அனைத்தும்; முத்ரா விரசனா - முத்ரைகளின் விளக்கமாக; ப்ராதக்ஷிண்ய-க்ரமணம் - பிரதக்ஷணமாகவும்; அசனாதி- உணவு வகைகள்; ஆஹுதிவிதி - ஹோமமாக; ஸம்வேஸ - படுத்துக் கொள்ளுதல்; ப்ரணாம: - நமஸ்காரம்; யத் விலஸிதம் - கார்யம் எல்லாம்; அகிலமபி - அதெல்லாம்; ஸபர்யா-பர்யாய: - பூஜை முறை.

ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்
விபத்யந்தே விஸ்வே விதி-ஸதமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனாநா
ந-ஸம்போஸ் தன் மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா

அம்பிகே! ப்ரம்மன், இந்திரன் போன்ற தேவர்கள் எல்லாம் தமது கிழத்தன்மை/மரணம் பீடிக்காதிருக்க அம்ருதம் பருகியவர்களாக இருந்தாலும் ப்ரளயகாலத்தில் அழிந்துவிடுகிறார்கள். ஆனால் உனது பதி பரமசிவனோ ஆலகால விஷத்தை பருகிய பின்னரோ அல்லது ப்ரளயகாலத்திலோ கூட அழிவதில்லை. இதற்கான காரணம் பரம பதிவ்விரதையான நீ, உனது செவிகளில் பூட்டியிருக்கும் தாடங்கம் என்னும் கர்ணாபரணத்தின் மஹிமைதான்.


அந்தக் காலத்தில் சுவாசினிகள் இன்றுபோல திருமாங்கல்யம் அணியும் முறை கிடையாது. சுமங்கலிப் பெண்கள் அணிவது கருகமணியும், பனை ஓலையால் ஆன காதணியும் தான். இன்றும் இல்லங்களில் வர-மஹாலெக்ஷ்மி அம்மனை ஜோடனை செய்கையில் இந்த காதோலை-கருகமணி (ரோஸ் கலரில் சுருட்டப்பட்ட பனை ஓலை ஒரு கருப்பு நிற சிறு வளையத்துள் நுழைத்தது) சார்த்தப்படுகிறது. அதுபோல அன்னை அணிந்த தாடங்கத்தின் மஹிமையைத்தான் ஆச்சார்யார் இங்கே குறிப்பிடுகிறார். இதைத்தான் காளிதாசன் "தாலீ பலாச தாடங்காம்" என்று சொல்வதாக பரமாச்சார்யார் சொல்லியிருக்கிறார். அதாவது தாலீ என்பது பனை மரத்தைக் குறிக்கும். இலைகளை சாதாரணமாக பலாசம் எனக் கூறுவார்கள்.சூர்ய-சந்திரர்களே அம்பாளின் தாடங்கங்கள் என்று சஹஸ்ரநாமம் கூறுகிறது.

ருத்ரத்தில் "யா தே ருத்ர சிவா தனூ: சிவா விச்வாஹ பேஷஜீ: சிவா ருத்ரஸ்ய பேஷஜீ தயா நோ ம்ருட ஜீவசே" என்று வருகிற வரியும் இந்த அர்த்தத்தில் தான். பொருளாவது, "பரமசிவனே, உனது சரீரத்தில் பாதியான பராசக்தியே உலகிற்கு மருந்து, ருத்திரனாகிய உனக்கும் அவளே மருந்து. அவளருளால்தான் நீ ஆலகாலத்தை உண்ட பிறகும் எங்களுக்காக பிழைத்து இருக்கிறாய்.


ப்ரதிபய-ஜராம்ருத்யு - பயங்கரமான மூப்பு-மரணம்; ஸுதா - அம்ருதம்; ஆஸ்வாத்ய அபி - சாப்பிட்டும் கூட; விதி-சதமக - ப்ரம்மா, இந்திரன்; ஆத்யா - முதலிய; திவிஷத - தேவர்களும்; விபத்யந்தே - பிரளய காலத்தில்; க்ஷ்வேலம் - விஷம்; கபலிதவத: - சாப்பிட்ட; காலகலனா - காலத்தை வென்ற

ஆனந்த லஹரி - 25 & 26


த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண-ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன்-முகுலித-க்ரோத்தம்ஸ மகுடா

அம்பிகே! உன் பாதத்துக்கு ஒரு அர்ச்சனை பண்ணினால் போதும், அதுவே த்ரிமூர்த்திகளுக்கும் பண்ணியதாகிறது. அது எப்படி என்றால், த்ரிமூர்த்திகளும் உன்னுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தினப் பலகையின் அருகில் அவர்களது சிரஸை வைத்து, சிரஸின் மேலே கைகளைக் கூப்பியவாறு அஞ்சலி செய்கிறார்கள். ஆகையால் உன் பாதத்தில் செய்யும் அர்ச்சனையானது அவர்களது சிரசுக்கும் சேர்த்து பண்ணியதாகிறது . இங்கு ருத்ரனுக்கும், சிவனுக்கும் வித்தியாசம் காண்பிக்கும் விதமாக த்ரிகுணத்தின் மூர்த்திகளில் அன்னையின் தமஸில் ஜனித்த ருத்ரன் அன்னையை வணங்குவதாக கூறியுள்ளார். அதாவது அன்னையின் தமஸிலிருந்து ஜனித்ததால் ருத்ரன் அன்னையின் குழந்தையாகிறார். குழந்தை தாயை வணங்குவது சரிதானே?.

த்ரிகுணங்கள் அப்படின்னு இங்கு ஆச்சார்யார் சொல்வது முத்தொழில்களையே. சிவம் சதுர்த்தம் என்பார்கள். த்ரிகுணங்களுக்கு மேலே இருக்கும் துரீயம் என்ற ப்ரஹ்ம நிலைதான் சதுர்த்தம். சாதாரணமாக ப்ரம்ஹம் கார்ய நிலைகளில் அதாவது த்ரிகுண நிலைகளில் இல்லாமல் தனித்து இருக்கும் அதுவே துரீயம். அதன் சித்சக்திதான் காமேஸ்வரி அப்படின்னு முதல் 10 ஸ்லோகங்களிலேயே சொல்லியிருக்கார். இந்த சித்-சக்திதான் த்ரிமூர்த்திகளை த்ரிகுணங்களுக்கான செயல்களுக்காக உருவாக்கியிருக்கிறாள். எனவே 'த்ரிகுண-ஜநிதானாம்'. அவள் ஜனனி, ஜனித்தவர்கள் மும்மூர்த்திகள் அப்படின்னு சொல்வது சரிதானே. 'தவ சிவே' துரீய நிலையில் இருக்கும் சிவன் என்பதாக செயலில்லாமல் ப்ரம்ஹ நிலையில் இருக்கும் சிவனே ஸதாசிவன். இதுவே லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வரும்போது, "ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்த ரூபிணிஸம்ஹாரிணி ருத்ரரூபா திரோதானகரீ ஈஸ்வரி" என்பதாக சொல்லப்படுகிறது.

சரீரத்தில் உள்ள ஆராதாரங்களை மூன்று கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அவை ப்ரம்மக்கிரந்தி, விஷ்ணுக்கிரந்தி, மற்றூம் ருத்ரக்ரந்தி என்பதாகச் சொல்லப்படும். ஆறாதாரங்களில் அம்பிகையை அந்தர்முகமாக பூஜிக்கப்படும் போது மும்மூர்த்திகளையும் சேர்த்துப் பூஜிக்கப்பட்டதாகும்.
பவேத் - ஆகும்; நிகடே - சமீபத்தில்; சச்வத் - எப்போதும்; முகுலித கரோ - குவித்த கரங்கள்;

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித-த்ருசா
மஹா ஸம்ஸாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதி ரஸெள


மஹா ப்ரளய காலத்தில் அம்பாளோடு விஹாரம் பண்ணிக் கொண்டிருக்கும் ஈச்வரனை தவிர ஸகலமும், ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் போன்றோர் கூட இல்லாமல் போகிறார்களாம். அதாவது பிர்ம்மா அழிவடைகிறார்; விஷ்ணு அப்படியே செயலின்றி சிலையாகிறார். எல்லோருக்கும் விநாசத்தை தரும் யமனும் நாசமடைக்கிறான். (கீனாசன் என்பதும் யமனது பெயரே). செல்வத்துக்கெல்லாம் அதிபனான குபேரனுக்கும் அச்செல்வத்தால் பயனின்றி முடிந்து போகிறான். (தநதன் என்பது குபேரனுக்கான பெயர்). ஒரு இந்திரன் மட்டுமல்லாது இந்திரப் பட்டாளமே அழிவுக்குள்ளாகிறது. அதென்ன இந்திரப் பட்டாளம்?. ஸ்ருஷ்டி ஆரம்பித்ததில் இருந்து மஹா ப்ரளயம் வரை பல மன்வந்திரங்கள் வந்திருக்குமல்லவா, அவற்றில் ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் ஒரு இந்திரன் இருந்திருப்பானல்லவா, அதனால் தான் மாஹேந்த்ரீ விததி என்கிறார் போலும். இந்தமாதிரி மூம்மூர்த்திகளும், தேவர்களும், முனிவர்களும் கூட மீளாத்துயிர் கொள்ளூம் அந்த மஹாப்ரளய காலத்திலும் (மஹா ஸம்ஹாரே) உன் பதி உன்னோடு விளையாடிக் கொண்டிருக்கிறான் என்கிறார் ஆச்சார்யார்.

இங்கு அம்பாளை குறிப்பிடுகையில் ஸதி என்றே கூறுகிறார். அன்னை பரம பதிவ்ரதை. பதிக்கு மரியாதை இல்லாத இடத்தில் தான் இருப்பது சரியல்ல என்றும் அப்படி மதிக்காத பிறந்தகத்தால் உருவான உடலே வேண்டாம் என்று தனது ஜீவனையே விட்டவள் தாக்ஷாயினி. அவளது இன்னொரு பெயரே ஸதி. இவளோ ப்ரம்ஹ சக்தி, அச்சக்திக்கு ஏது அழிவு?. அப்படி அப்பட்ட சக்தி பதிவ்ரதை என்றால் அவளது பதியும் அழிவில்லாதவன் தானே?. ஆகையால்தான் அவன் மட்டும் ப்ரளய காலத்தில் அழிவில்லாது இருக்கிறான் என்கிறார். இப்பாடலில் தநன, நிதந, விநாச, கீநாச என்று வார்த்தை ஜாலங்களைச் செய்திருக்கிறார் பகவத் பாதர்.

ஆனந்த லஹரி - 23 & 24


த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேன மனஸா
சரீரார்த்தம் சம்போ-ரபரமபி சங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம் ஸகல-அருணபம் த்ரிநயனம்
குசாப்யா-மாநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம்

அர்த்தநாரிஸ்வர ரூபத்தை சொல்வது போல ஆரம்பித்து சிவ-சக்தி ஐக்கியத்தைச் சொல்லும் ஸ்லோகம் இது. ஈஸ்வரனைப்போல முக்கண்ணும், கிரீடத்தில் சந்த்ர கலையும், கொண்டிருக்கும் அன்னையை விளித்து சொல்லப்படுகிறது....ஈசன் வெண்மையானவர், ஆனால் அன்னை சிவந்த நிறத்தவள் (அருண நிறம் பற்றி நிறைய பார்த்தோம் முன்னரே). ஈஸ்வரனின் இடது பாகத்தில் அன்னை இருக்கிறபடியால் ஈசனின் வெண்மை மறைந்து அருண நிறம் வந்து விடுகிறாதாம். பாதி உடலாக இருக்கும் அன்னைக்கு அந்த பாதியில் த்ருப்தியில்லாமல் இன்னொரு பாதியினையும் தனதாக்கிக் கொண்டாளாம். ஆகையால் ஈசனின் சந்திரனும், மூன்றாம் கண்ணும் அன்னை கொண்டிருப்பதாகவும், இரண்டு ஸ்தனங்களால் சற்றே வளைந்தும் இருப்பதால் இந்த சந்தேகம் கொண்டதாக சொல்கிறார் ஆச்சார்யார். இந்த ஸ்லோகமானது ருண விமோசனத்திற்கு பாராயணம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.


ஏதத் - என்னுடைய; த்வத் ரூபம் - உன் ரூபம்; ஸகலம் அருணபம் - முழுவதும் சிவப்பான நிறத்துடன்; த்ரிநயனம் - முக்கண்களுடன்; குசாப்யாம்- ஸ்தனங்கள்; அநம்ரம் - வளைந்த; குடில-சசி-சூடால மகுடம் - பிறைச் சந்த்ரனை சூடிய மகுடம்; வாமம் வபு: சரீரத்தின் இடது பகுதி; அபரி த்ருப்தேன - முழுமையான த்ருப்தியில்லாத; அபரம் சரீரார்த்தம் அபி - சரீரத்தின் இன்னொரு பாதியும்; ஹ்ருதம் அபூத் - கவர்ந்து கொள்ளப்பட்டது; சங்கே - சந்தேகம்


ஜகத்ஸுதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வந்-நேதத் ஸ்வமபி வபுரீசத்-திரயதி
ஸதா-பூர்வ: ஸர்வம் ததித-மநுக்ருஹ்ணாதி ச சிவஸ்
தவாஜ்ஞா-மாலம்ப்ய க்ஷண-சலிதயோர் ப்ரூ-லதிகயோ


இதன் ஆரம்பமே 'பஞ்ச க்ருத்ய பராயணா' என்னும் நாமம் தான். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம் (மாயை/மறைத்தல்), அனுக்ரஹம் என்னும் ஐந்து தொழில்களை முறையே ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், சதாசிவன் ஆகியோர் மூலம் நடத்துகிறாள் அம்பாள். இதை இந்த ஸ்லோகத்தில் பின்வருமாறு சொல்கிறார் ஆச்சார்யார். ஹே பராசக்தி!, படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களை செய்யும் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரையும் தன்னுள் மறைத்துக் கொண்டு தன்னையும் மறைத்துக்கொள்கிறான் ஈசானன். ஸதாசிவன் என்னும் பரபிரம்ஹமானது கொடி போன்ற உன் புருவ அசைவினை ஆதாரமாகக் கொண்டு ப்ரம்ம-விஷ்ணு-ருத்ரன், மஹேசன் ஆகியோரது செயல்கள் செய்விக்கிறான்.


தா(4)தா - ப்ரம்மா; ஜகத்-ஸுதே - உலகை படைக்கும்; ஹரி-ரவதி = ஹரி-அவதி - அதாவது ஹரி ரக்ஷிக்கும்; க்ஷபயதே - அழிக்கும்; திரஸ்குர்வன் ஏதத் - திரோதானத்தால் இவற்றை மறைக்கும் (மாஹேசன்); ஸதா பூர்வ: சர்வம் - ஸதா என்னும் அடைமொழியினை கொண்ட சிவனான ஸதாசிவன்; க்ஷண-சலிதயோ: - நொடி நேர அசைவினால்; ப்ரூலதிகயோ - புருவங்கள் என்னும் கொடிகள் (ப்ரூ - அப்படின்னா புருவங்கள் ("ப்ரூவோர் மத்யே சகஸ்ராக்ஷி" அப்படிங்கறது தெரிந்திருக்கும்); லதை-லத்திகா அப்படிங்கறதெல்லாம் கொடிங்கற அர்த்தத்தில் வரும்); ஆஜ்ஞாம் - ஆணை; ஆலம்ப்ய - அனுசரித்து; அனுக்ருஹ்ணாதி - அனுக்கிரஹம்

ஆனந்த லஹரி - 21 & 22


தடில்லேகா-தன்வீம் தபன-சசி வைசானர-மயீம்
நிஷண்ணாம் ஷண்ணா-மப்யுபரி கமலானாம் தவ கலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மல மாயேன மனஸா
மஹாந்த: பச்யந்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்

இந்த ஸ்லோகத்தில் குண்டலினீ யோகத்தில் ஸித்தி அடைந்தவர்களது நிலை சொல்லப்பட்டிருக்கிறது. மூலாதாரத்திலிருந்து படிப்படியாக மேலெழும்பிய குண்டலினீ சக்தியானது ஆக்ஞா சக்ரத்தில் மட்டும் அதிக நேரம் நிலைகொள்ளாது மின்னல் கொடி போல தோன்றி உடனடியாக க்ஷண நேரத்தில் மேலெழும்பி ஸஹஸ்ரார கமலத்தை அடைகிறதாம். காமம், மாயை போன்ற மலங்களை நீக்கி, சூர்ய சந்திரர்கள் போலவும் அக்னி, போன்றதுமான உனது கலையை சஹஸ்ராரத்தில் தியானிப்பவர்கள் பேராந்தமான அலைகளில் மூழ்கித் திளைப்பர் என்கிறார்.

இவ்வாறாக குண்டலினீ சஹஸ்ராரத்தில் சிவனுடன் சேர்ந்து ஐக்ய ஸ்வருபத்தில் நிலையாக குளிர்ந்து ப்ரகாசிப்பதை "ஸ்திர செளதாமினி" என்றும் க்ஷண நேரமே ஆக்ஞா சக்ரத்தில் இருப்பதால் "க்ஷண செளதாமினி" என்றும் இரு நாமங்களாக சஹஸ்ர நாமத்தில் கூறப்பட்டிருக்கிறது

தடித்-லேகா-தன்வீம் - மின்னல் போன்ற சூக்ஷ்மமான தேஜோரூபம் உடையதும்; தபன-சசி-வைச்வானர மயீம் - சூர்ய-சந்த்ர, அக்னி ஆகியவற்றில் ப்ரகாசிப்பதும். ஷண்ணாம் கமலானாம் அபி - ஆறு ஆராதாரங்களுக்கு மேலே; மஹாபத்ம அடவ்யாம் - தாமரை மலர்களாலான காடு போன்ற சஹஸ்ராரத்தில்; நிஷண்ணாம் - நிலையான;

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட மகுட நீராஜித பதாம்

ஈஸ்வரனுக்கு 'பவன்' என்று ஒரு பெயரிருக்கிறது, ஸ்ரீ ருத்ரத்தில் ''பவாயச ருத்ராயச' என்று வருகிறதே அதுதான். சிவனின் 8 பெயர்களில் முதல் பெயர் பவன். அந்த 8 பெயர்களாவன, பவன், சர்வன், ஈசானான், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மாஹாதேவன். இதில் ஸ்ருஷ்டிக்கு மூலமாக இருப்பவன் பவன். பவனுடைய சக்தி பவானி.

த்வம் - நீ; தாஸே மயி - தாஸனான என்னிடத்தில்; ஸகருணாம் - கருணையுடன் கூடிய; த்ருஷ்டிம் விதர - பார்வையைச் செலுத்துவாயாக. ஸ்தோதும் வாஞ்சன் - ப்ரார்த்தித்துக் கொள்ள ஆசைப்பட்டு; ததைவ - அப்போதே / உடனேயே; த்வம் - நீ; தஸ்மை - அவனுக்கு; நிஜ ஸாயுஜ்ய பதவி - நீயே ஆன சாயுஜ்ய பதவியினை (அதாவது அன்னையே சாயுஜ்யம் எனப்படுவதாம்); திசஸி - கொடுக்கிறாய்; முகுந்தன் என்றால் திருமால். ப்ரஹ்மேந்த்ர = ப்ரம்ஹ + இந்தர; ஸ்புட மகுட - ப்ரகாசமான க்ரீடம்; நீராஜனம் என்றால் நமக்கு தெரியும் கர்பூர நீராஜனம், புனர் நீராஜனம் என்றெல்லாம் சொல்கிறோமே, அதுதான்.

"பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்" என்று சொல்லி அவள் கடாக்ஷத்தை ப்ரார்த்திக்க ஆசைப்பட்ட ஒருவன் இதில் முதல் இரண்டு சொற்களான 'பவானி த்வம்' என்று சொல்ல ஆரம்பித்த உடனேயே நீ அவனுக்கு, விஷ்ணு, ப்ரம்ஹா, இந்திரன் ஆகியோரின் க்ரீடங்களின் ஒளியால் தீபாராதனை செய்யப்பட்ட உனது பாதங்களைப் பெறும்படியான, உனதேயான ஸாயுஜ்ய பதவியைக் ஸாயுஜ்ய பதவியினை தந்தருளுகிறாய்" என்கிறார் இந்த ஸ்லோகத்தில்.

பரமாச்சார்யார் இது பற்றி சொல்லுகையில், இங்கே ஆச்சார்யார் சொல்லியிருப்பது ஞான வழியில் போய் நிர்குண ப்ரம்ஹத்தோடு ஐக்யமாகும் அத்வைத ஸாயுஜ்யம் இல்லை என்று கூறுகிறார். ஏனென்றால், அடுத்த வரி 'முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம்' என்பதை காரணமாகச் சொல்கிறார். அம்பாளுடன் அவன் ஐக்ய சாயுஜ்யம் பெற்றுவிட்டால் அப்போது அவனுக்கே 'முகுந்த ப்ரஹ்மேந்த்ர' என்பதான தன்மை அவனுக்கே கிடைத்து விடுகிறது. ஆனால் அத்வைதத்தில் ஸாயுஜ்யம் அடையும் போது அங்கு மூர்த்தியே கிடையாது, பிறகு ஏது பாதங்கள், மகுடங்கள்?. நிர்குண தத்வம் என்பது மேலே சொன்ன பாடலில் இல்லை. எனவே இங்கே ஆதிசங்கரர் சொல்லியிருப்பது அத்வைத ஸாயுஜ்யம் இல்லை என்பார். இந்த ஸ்லோகமானது சர்வ ஸித்திகளையும் தரும் மந்த்ரம் என்றால் மிகையாகாது.

ஆனந்த லஹரி - 19 & 20



முகம் பிந்தும் க்ருத்வா குசயுக-மதஸ் தஸ்ய தததோ
ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்
ஸ ஸ்த்ய: ஸம்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து-ஸ்தநயுகாம்


பரமசிவனின் பட்டமஹிஷியே!, ஸ்ரீ சக்ர மத்தியிலுள்ள பிந்துவில் காமகலா ரூபிணியான உனது முகத்தையும், அவயவங்களையும் தியானம் செய்து கொண்டு காம கலையாகிய 'க்லீம்' என்னும் பீஜத்தை எவன் அவ்வயவங்களில் தியானம் செய்கிறானோ அவன் தனது காம சக்திகளைவசப்படும்படி செய்கிறான். இவ்வாறு காமகலா பீஜத்தை உபாசிப்பவன் சூர்ய-சந்திரர்களைப் போன்ற ஸ்தனங்களைக் கொண்ட முவுலகிலும் சிறந்த மடந்தையையும் கூட விரைவில் மயங்கச் செய்வான். இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ஸ்திரீ வசியம் நிச்சயம். ஏனென்றால் ஹரார்த்தம் என்பதில் 'ஹ' என்பது ஹம்ஸ: என்பதைக் குறிக்கிறது. ஹம்ஸ: என்பது மூன்று பிந்துக்களைக் குறிக்கும் மன்மதகலையாக கொள்ளப்பட்டிருக்கிறது. இவ்வாறு காமகலா த்யானம் செய்பவர் தேவியின் ஸ்வருபமாகவே ஆகிவிடுகிறான். இவனுக்கு முக்தி நிச்சயம் என்கிறது அருணா மோதினீ.

தஸ்ய அத: - அதற்கும் கீழே; குசயுகம் - ஸ்தனங்கள்; ததத: - அதற்கும் கீழே; வனிதா: - காம சக்தியின் ஒரு பெயர்; அதிலகு - மிக எளிது; ரவி-இந்து ஸ்தன-யுகாம் - சூர்ய சந்திரர்கள் போன்ற ஸ்தனங்கள்; த்ரிலோகீம் அபி - மூவ்வுலகத்திலும்.

கிரந்தீம்-அங்கேப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி-த்வாம் ஆதத்தே ஹிமகர-சிலா மூர்த்திம் இவ ய:
ஸ ஸ்ர்பாணாம் தர்பம் சமயதி ஸகுந்தாதிப இவ
ஜ்வர-ப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா

அங்கங்களிலிருந்து கிரணக் கூட்டங்களாக அமுதச் சாற்றினை பெருக்குகின்ற சந்த்ரகாந்தக் கல்போன்ற உன்னை எவன் இதயத்தில் நிலைநிறுத்திக் கொள்கிறானோ அவன் புள்ளரசனைப்போல பாம்புகளின் வீர்யத்தை அடக்குகின்றான். அமுதமயமான நாடியுடன் அவன் பார்க்கும் பார்வையானது நோயுற்று ஜ்வரத்தால் பீடிக்கப்பட்டவனை நலமடையச் செய்யும்.

முன்னே 17ஆம் ஸ்லோகத்தில் அன்னையை சசிமணிசிலா என்று சந்த்ரகாந்த கல்லை உடைத்தாற்போல என்பதாக வர்ணித்தார். இங்கே 20ஆம் ஸ்லோகத்திலோ ஹிமகரசிலா என்கிறார். சசம் என்றால் முயல். சந்திரனில் தெரியும் கருப்பு நிறத்திட்டானது முயல் ரூபத்தில் இருக்கிறபடியால் சந்திரனுக்கே 'சசி' என்று பெயர். சாதாரணமாக சந்திரனிலிருந்துதான் அம்ருதமும் பனி ஜலமும் உருவாவதாக சொல்லப்படும். இந்த பனி ஜலத்தை உருவாக்குவதால் சந்த்ரனுக்கு ஸுதாகரன் என்ற நாமம் உண்டு. இன்றைய ஸுதாகர் என்னும் பெயர் இவ்வாறு வந்ததுதான். இந்த சந்திரன் பனி மலையினை உருவாக்குவதால் ஹிமகரன் என்றும் பெயர். ஹிமயமலை என்றால் பனிமலை என்றே பொருள். பனிமலை நிறத்தில் அன்னை என்பதை ஹிமகர-சிலா என்று கூறி அவளிடத்துப் பெருகும் அம்ருதரஸம் என்று ஆரம்பித்து ஸ்லோகத்தின் முடிவில் அவளை வழிபடுவதால் உபாசகனும் அம்ருதத்தை பெருக்குவதாக சொல்லி முடிக்கிறார். அதாவது சஹஸ்ராரத்தில் அன்னையை நிலை நிறுத்தி ஜபம் செய்கையில் உபாசகனுக்கு ஏற்படும் உணர்வினை அம்ருத ஊற்றாக உருவகப்படுத்துவது வழக்கம். அதை குறிப்பால் உணர்த்திச் செல்கிறார் ஆச்சார்யார்.

ரோக நிவாரணத்திற்காகச் சொல்லும் ஸ்லோகம் இது. முன்பு சொன்னது போல செளந்தர்ய லஹரி முழுவதுமே மந்த்ர சாஸ்த்ரமாகும். இதில் ஒவ்வொரு ச்லோகத்தையும் மந்த்ரமாக நினைத்து ஜபித்தால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த ஸ்லோகங்களுக்கான தனி-தனி சக்ரங்கள், த்யான, பாராயணாதி முறைகளை அறிந்து குருமுலமாக செய்ய வேண்டியது.

ஆனந்த லஹரி - 17 & 18




ஸவித்ரீபிர்-வாசாம் சசிமணி-சிலா-பங்க-ருசிபிர்

வசின்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய:

ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பன்கிருசிபிர்

வசோபிர்-வாக்தேவீ-வதன கமலா மோத மதுரை:

அன்னையே!, நீ வசினி முதலிய எண்வகையான சக்திகளுடன் கூடியவள். அந்த சக்தி தேவிகள் நவரசஸங்கள் நிரம்பிய சொல் நயத்தை அளிப்பவர்கள். உடைந்த சந்திர காந்த கல்லின் உள் பகுதிபோல் வெண்மையான ஒளி நிறைந்தவர்கள். அவர்களையும், உன்னையும் உபாசிப்பவன், மிகுந்த மணமுள்ள தாமரை போன்ற முகமுடைய உன் முகம் போன்ற இனிமையான வார்த்தைகளமைத்து, மஹாகவிகளின் படைப்புக்களைப்போல் காவியங்கள் எழுத வல்லவனாவான்.


இங்கு கூறப்பட்டுள்ள வசினி தேவதைகளே அன்னையின் சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தவர்கள். இந்த வசினி தேவதைகள் எண்மர். அவர்களாவது, வசினீ, காமேஸ்வரீ, மோதினீ, விமலா, அருணா, ஜயினீ, ஸர்வேஸ்வரீ, கெளலினீ. இந்த தேவதைகளே வாக்கைப் பிறப்பிக்கும் அன்னையர். ஆகவேதான் ஸவித்ரீபி: வாசாம் என ஆரம்பிக்கிறார். இவர்கள் எந்த வர்ணத்தவர் என்றால், சந்திர காந்த கல்லின் உள்புறம் போன்ற வெண்மை நிறைந்தவர்களாம். ஒரு இடத்தில் 'சரத் ஜ்யோத்ஸ்நா சுத்தாம்' என்பதாகவும், இன்னொரு இடத்தில் அருணா என்றும் கூறியவர் இப்போது சரத் ஜ்யோத்ஸ்நா போன்ற வாக்தேவதைகள் சூழ அருணாவாக வீற்றிருக்கிறாள் அன்னை என்கிறார். இந்த முறையில் அன்னையை உபாசிப்பவர்கள் சிருங்கார ரஸம் மிகுந்த கவித்திறன் உடையவர்களாக விளங்குவார்கள் என்பதற்கு காளிதாஸனே உதாரணம்.


வாசாம் - வாக்கு/வாக்கின்; ஸவித்ரீபி: - பிரவர்த்தகர்களும்; சசி-மணி-சிலா-பங்க-ருசிபி: - சந்திரகாந்த கல்லை உடைத்தாற்போன்ற காந்தி உடைய ; வாக்தேவி-வதன-கமலா-மோத-மதுரை: - சரஸ்வதி தேவியின் முககமலத்தின் பரிமளம் போன்ற மதுரமான ; காவ்யானாம் - காவியங்கள்; கர்தா - உடையவன்; பவதி - ஆகிறான்; மஹதாம் - மகான்களுடைய ;



தனுச்சாயாபிஸ்-தே தருண-தரணி ஸ்ரீ ஸரணிபிர்

திவம் ஸர்வா-முர்வீ-மருணிமனி மக்னாம் ஸ்மரதி ய:

பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வன-ஹரிண சாலீன நயனா

ஸஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வாண கணிகா:


எவன் ஒருவன் இளஞ்சூரியனுடைய வெயிலைப்போன்ற வர்ணமுள்ள அன்னை ஜகன்மாதாவின் உடலின் ஒளியில் ஈரேழு உலகங்களும் மூழ்கியதாக தியானிக்கிறானோ அவனுக்கு மானின் கண்கள் போன்ற மருண்ட கண்களையுடைய ஊர்வசி போன்ற தேவகன்னிகளும் வசியமாவார்களாம்.


தருண-தரணி - உதய சூரியன் (உதிக்கின்ற செங்கதிர்?); ஸ்ரீ-ஸ்ரணிபி: - அழகு வெள்ளம் போன்ற; தனு-ச்சாயாபி - தேக ஒளி; திவம் - தேவலோகம்; உர்வீம் - பூலோகம்; அருணிமனி - இளஞ்சிவப்பு; மக்னாம் - மூழ்கிய; ஸ்மரதி - தியானிக்கிறவன்; வன-ஹரிண - காட்டு மான்; சாலீன நயனா - அழகிய கண்கள்; கீர்வாண கணிகா - அப்ஸ்ரஸ்திரீகள்; கதி கதி - எத்தனை எத்தனை; வச்யா - வசப்பட்டவர்கள்; ந பவந்தி - ஆக மாட்டார்கள்.

ஆனந்த லஹரி - 15 & 16



சரஜ்-ஜ்யோத்ஸ்னா-ஸுத்தாம் சசியுத ஜடாஜுட மகுடாம்
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக குடிகா-புஸ்தக கராம்
ஸக்ருந்ந த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே
மது-க்ஷிர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதயா


அன்னையே! நீ சரத்காலத்துச் சந்திரனைப் போல் வெளுப்பானவள். பிறைச்சந்திரனையும், நவரத்ன கிரீடத்தையும் முடியில் தரிப்பவள். அபய-வரத முத்திரைகளையும், ஸ்படிகமணி மாலையினையும், புஸ்தகத்தையும் கைகளில் தாங்கியவள். இவ்வாறாக இருக்கும் உன்னை ஒருதரம் வணங்கும் பக்தர்களுக்கும் தேன், பால், திராக்ஷை போன்றவற்றை விட அதிகமாக இனிக்கும் சொல் நயங்கள் எப்படி வராது போகும்?.


இந்த பாடலில் தேவியின் (சரஸ்வதி ரூபம்) சுத்த சத்வ வடிவினைப் பற்றி சொல்லியிருக்கிறார் சங்கரர். சரத்-ஜ்யோத்ஸ்னா சுத்தாம் - ரஜோ மற்றும் தமோகுணம் அற்ற சுத்த ஸ்த்வத்தை குறிக்கும் நிறம் வெண்மை. இதனால் தான் சரஸ்வதிக்கு ஏற்ற நிறமாக வெள்ளை சொல்லப்பட்டு இருக்கிறது. சசியுத ஜடாஜுட மகுடாம் - சந்திர கலையினை முடியில் சூட்டியிருப்பதால் பராசக்தியின் வடிவிலிருந்து இது வேறு அல்ல என்பது தெரிகிறது. இது மஹா சரஸ்வதியின் வடிவம். வர-த்ராஸ-த்ராண - அபய, வரத முத்திரைகள்; ஸ்படிக-குடிகா - ஸ்படிகமணி மாலை; ஸக்ருத் - ஒரு முறை; நத்வா - நமஸ்கரித்தல்; பணிதய: - சொற்றோடர்கள்; கதமிவ - எப்படி; ஸ்ந்நித ததே - சித்திக்காமல் போகும்?.



அன்னை லலிதா மாஹா த்ரிபுர சுந்தரி தன்னிலிருந்து முதலில் தோற்றுவித்தது மூன்று சக்திகள். அவை முறையே மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹாசரஸ்வதி. இந்த மூன்று வடிவங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் இரண்டு வடிவங்கள் தோன்றியதாம். மஹாலஷ்மியிடமிருந்து ப்ரம்மாவும், லஷ்மியும் (சிவப்பு வர்ணம்), மஹாசரஸ்வதியிலிருந்து விஷ்ணுவும், பார்வதியும் (நீல வர்ணம், இப்போது தெரிகிறதா விஷ்ணுவும், பார்வதியும் ஏன் சகோதர-சகோதரி பாவம் என்று?), மஹாகாளியிடமிருந்து சிவனும் சரஸ்வதியும் (வெண்மை நிறம்) கொண்டு தோன்றினர் என்று தேவீ மஹாத்மீயம் கூறுகிறது. 'ஸர்வ வர்ணாத்மிகே'ன்னு காளிதாசர் ச்யாமளா தண்டகத்தில் சொல்வது இதனால்தான்.



லக்ஷ்மி அஷ்டோத்திரமாகட்டும், சரஸ்வதி அஷ்டோத்திரமாகட்டும், 'ப்ரம்ம-விஷ்ணு சிவாத்மிகாயை'என்று ஒரு நாமாவளி வருவதை கவனித்து இருக்கலாம். அன்னை லலிதாவே ப்ரம்ம ரூபமாக ஸ்ருஷ்டி கார்த்தாவாகவும், விஷ்ணு ரூபமாக கோப்த்ரியாகவும், ருத்ர ரூபமாக ஸம்ஹார மூர்த்தியாகவும் விளங்குகிறாள். இதனால்தான் ப்ரம்ம-விஷ்ணு-சிவாத்மிகா.




கவீந்த்ராணாஞ் சேத: கமலவன பாலாதப-ருசிம்
பஜ்ந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம்
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ச்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதத்தி ஸதாம் ரஞ்ஜனமமீ


அன்னை சிறந்த கவிகளின் மனமாகிய தாமரை மலர்களை மலரச்செய்யும் இளம் வெய்யிலில் தோன்றும் சிவப்பு நிறத்தவள். அன்னையைப் பணியும்
எல்லோருக்கும் சரஸ்வதி தேவியின் யெளவன சிருங்கார ரஸத்தின் பிரவாகம் போன்ற சொல் வன்மை உண்டாகி அவர்கள் தம்மை சுற்றி உள்ளவர்களை மகிழ்விப்பார்கள்.


முந்தைய ஸ்லோகத்தில் வெண்மை நிறத்தினளாக அன்னையை கூறிய ஆச்சார்யார், இங்கு சிவப்பு நிறத்தவள் என்கிறார். அதுவும் எப்படி அருணோதய சூர்யன் போன்ற, அதாவது சூரியன் உதிக்கும் போது வரும் சிவந்த நிறமாம். இதைத்தான் 'உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்' என்கிறார் அபிராமி பட்டர். வெண்மை எப்படி சத்வ குணமோ அது போல சிவப்பு ரஜோ குணத்தை குறிப்பது. ஏன் சிவப்பு என்பது இங்கு ரஜோ குணத்தை குறிக்க வேண்டும்?. ஏனென்றால் பின்வரும் வரியில் அன்னை சிருங்கார ரஸத்தை தருவதாக கூறுவதால். சிருங்கார ரஸம் என்பதும் ரஜோகுணத்தை குறிப்பதுதான். 'அருணாம் கருணா-தரங்கிதாஷாம்' என்றுதான் அன்னையின் தியான ஸ்லோகமே ஆரம்பிக்கிறது.



ஆமாம்! இப்படி லலிதையின் வர்ணமான சிவப்பினை கூறி, உடனேயே விரிஞ்சி-ப்ரேயாஸ் என்று சரஸ்வதியை குறிக்க காரணம்?. அருண சரஸ்வதி
என்று அன்னைக்கு ஒரு ரூபம் உண்டு. அந்த ரூபத்தில் அன்னை காமாக்ஷி போல பாசாங்குசமும், தனுர்-பாணமும் நான்கு கைகளில் ஏந்தி, இன்னும் நாலு கைகளில் ஸரஸ்வதிக்கு உரிய அஷமாலை, புஸ்தகம், வர-அபயம் கொண்டும் இருக்கிறாளாம். அந்த ரூபத்தையே இங்கு மறை பொருளாக சொல்லியிருக்கிறார்.



கவீந்த்ராணாம் - கவியரசர்களின்; சேத: கமல வன-பால ஆதப ருசிம் - சித்தமாகிய தாமரை வனத்திற்கு உதய சூரியனாய் பிரகாப்பதால்; அருணாம் ஏவ (அருணா மேவ) - அருணா என்று பெயர் பெற்றவளும்; பவதீம் - உன்னை; பஜந்தே - பூஜிக்கிறவர்கள்; விரிஞ்சி ப்ரேயஸ்யா: - ப்ரம்ம பத்னியான சரஸ்வதியின்; தருண-தர - செழிப்பான; ச்ருங்கார லஹரி - சிருங்கார ரஸ பிரவாஹம்; கபீராபி: - கம்பீரமான; வாக்பீ - வாக்குகளால்; ரஞ்ஜனம் - மகிழ்ச்சி; விதததி - அளித்தல்