
நரம் வர்ஷீயாம்ஸம் நயநவிரஸம் நர்மஸு ஜடம்
தவாபாங்காலோகே பதித-மநுதாவந்தி சதச:
கலத்வேணீபந்தா: குசகலச-விஸ்ரஸ்த-ஸிசயா
ஹடாத் த்ருட்யத்-காஞ்ச்யோ விகலித-துகூலா யுவதய:
தேவி! உன்கடைக்கண் பார்வையில் அகப்பட்டவன் கிழவனாகவோ, அல்லது பார்ப்பதற்கு குரூபியாகவோ அல்லது சக்தியற்றவனாகவோ இருந்தாலும் அழகிய யெளவனப் பெண்கள் வெட்கத்தை விட்டு அவனைப் பின் தொடரக்கூடிய வசிய சக்தியினை நீ அளிக்கிறாய். அதாவது அன்னையின் கடைக்கண் பார்வையே வசிய சக்தியினை ஏற்படுத்தக் கூடியதாம். இங்கு கூறப்பட்ட பெண்கள், சாதாரணமாக காமசவப்பட்டு அவனை பின் தொடருவதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. கீதையில் கிருஷ்ணன் சொன்னதை இங்கு நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதாவது ஸ்தீரிகளுள் நான், கீர்த்தி, செல்வம், வாக்தேவதை, ஞாபக சக்தி, திடசித்தம், பொறுமை ஆகிய சக்திகளாக இருப்பதாக கிருஷ்ணன் சொல்கிறான். எனவே மேலே யெளவன பெண்கள் என்று கூறுவது இந்தமாதிரியான யெளவன பெண்ணுருவம் கொண்ட சக்திகள் அவனை அடையும் என்றே கருத வேண்டும். மேலும், தேவியின் கடாக்ஷம் பெற்ற எவனும் காமேஸ்வர அம்ஸமுடையவனாகிறான். எனவே, கண்ணன் சொன்ன அந்த சக்திகள் தேவியின் கடைக்கண் பார்வை பெற்றவனை தேடி வந்து சேர்வதில் தவறொன்றும் இல்லை.
இதை பரமாச்சாரியார் சொல்லும் போது பின்வருமாறு சொல்கிறார். "ஸகல விஷயங்களிலும் நமக்குள்ள சித்த விகாரங்கள் எல்லாம் நிவிருத்தியாக வேண்டும் என்பதற்காகத்தான் கரும்பு வில்லையும், புஷ்பபாணங்களையும் அன்னை தன் கையில் வைத்துக் கொண்டு இருக்கிறாள். அவளது கடாக்ஷம் ஏற்படுமானால் எல்லாவற்றையும் சமமாக பார்க்கும் சக்தி, எந்த விதத்திலும் மோகம் ஏற்படாத நிலை உண்டாகிவிடும்".
அபாங்க-ஆலோகே - கடைக்கண் பார்வையில்; நரம் - மனிதன்;
வர்ஷியாம்ஸம் - வயதானவன்; நயனவிரஸம் - பார்க்க சகிக்காத;
ஜடம் - மூடன்; நர்மஸு - சிற்றின்ப விளையாட்டுக்கள்;
களத்-வேணீ-பந்தா: - கலைந்த கூந்தலுடைய பெண்கள்;
குசகலச-விஸ்ரஸ்த - மேலாடை விலகிட்டவர்களாக;
ஹடாத்-த்ருட்யத்-காஞ்ச்ய: - பரபரப்பில் ஒட்டியாண பூட்டுக்கள் கழல; சதச: - நூற்றுக்கணக்கானவர்கள்; அனுதாவதந்தி - பின் தொடர்கிறார்கள்.
க்ஷிதெள ஷட்பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாஸ-துதகே
ஹுதாஸே த்வாஷஷ்டிஸ் சதுரதிக பஞ்சாஸ-தநிலே
திவி த்வி: ஷட்த்ரிம்ஸந்-மநஸிச சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ்-தேஷா-மப்யுபரி தவ பாதாம்புஜ-யுகம்
தாயே, ப்ருதிவீ தத்துவமான மூலாதாரத்தில் 56 கிரணங்களும்,
ஜல தத்துவமாகிய மணிபூரகத்தில் 52 கிரணங்களூம்,
அக்னி தத்துவமாகிய ஸ்வாதிஷ்டானத்தில் 62 கிரணங்களும்,
வாயு தத்துவமாகிய அநாஹதத்தில் 54 கிரணங்களும்,
ஆகாச தத்துவமாகிய விசுத்தி சக்கரத்தில் 72 கிரணங்களும்,
மனஸ் தத்துவமாகிய ஆஜ்ஞா சக்கரத்தில் 64 கிரணங்களும்
இருப்பதாக (யோக) சாஸ்திரம் சொல்கிறது. இந்த சக்கரங்களுக்கு/கிரணங்களுக்கு மேலே உள்ள ஸஹஸ்ரார கமலத்தின் மத்தியில் உன் திருவடிகள் விளங்குகின்றது.
ஆறு ஆதாரங்களும் காலகதிக்கு உட்பட்டது என்பதும், அற்றிற்கு மேலே விளங்கும் தேவியின் திருவடிகள் காலத்தை கடந்தவை என்பதும் இங்கு குறிப்பால் உணர்த்தப்படுகிறது. இதில், மூலாதாரம் என்பது 56 நாட்களைக் கொண்ட வஸந்த ருதுவாகவும், மணிபூரகம் 52 நாட்களைக் கொண்ட க்ரீஷ்மருதுவாகவும், ஸ்வாதிஷ்டானம் 62 நாட்களைக் கொண்ட வர்ஷ ருதுவாகவும், அனாகதம் 54 நாட்களைக் கொண்ட சரத் ருதுவாகவும், விசுத்தி 72 நாட்களைக் கொண்ட ஹேமந்தருதுவுக்கு ஒப்பாகவும், ஆஜ்ஞை 64 நாட்கள் கொண்ட சிசிர ருதுவுக்கு ஒப்பாகவும் சொல்லப்படுகிறது. ப்ரம்மாண்டத்தில் நாட்களாக இருப்பது பிண்டாண்டத்தில் கிரணங்களாக சொல்லப்படுகிறது.
க்ஷட்பஞ்சாசத் - ஐம்பத்தாறு, த்விஸமதிக-பஞ்சாசத் - ஐம்பத்திரண்டு; த்வாஷஷ்டி: - அறுபத்திரண்டு; சதுரதிக-பஞ்சாசத் - ஐம்பத்து நான்கு; த்வி: ஷட்த்ரிம்சத் - எழுபத்திரண்டு; சதுஷ் ஷஷ்டி: - அறுபத்து நான்கு; பாதாம்புஜம் - திருவடிகள்; தேஷாம் அபி - எல்லாவற்றுக்கும் மேலாக; மயூகா: - கிரணங்கள்;
க்ஷிதெள - பூமியைக் குறிக்கும் மூலாதாரம்; உதகே - ஜலத்தை குறிக்கும் மணிபூரகம்; ஹுதாசே - அக்னி ரூபமான ஸ்வாதிஷ்டானம்; அனிலெ (தநிலே) - வாயுதத்துவத்தை குறிக்கும் அனாஹதம்; த்வி - ஆகாச தத்துவத்தை உள்ளடக்கிய விசுக்தி; மனஸி ச - மனஸுடன் சம்பந்தமுடைய ஆக்ஞை;